Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் கடந்த சில மாதங்களாக படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் பால் முகவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பால் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் சார்பில் பச்சை, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு வகையான பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தினசரி 6 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமாக ஆவின் பால் விநியோகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், கடந்த ஜூலை மாதம் முதல் படிப்படியாக பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக பால் முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கடந்த 3 மாதங்களாக பச்சை மற்றும் நீல நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது கிரீம் மில்க் மட்டுமே விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதுவும் தேவையான அளவுக்கு கிடைக்காததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு ஆவின் பாலகத்திற்கு முன்பு 150 லிட்டர் வரை பால் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 75 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும், தினசரி 40 லிட்டர் தேவைப்படும் பாலகங்களுக்கு 10 முதல் 15 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும் பாலக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆவின் பால் மற்றும் நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தனியார் நிறுவனங்களின் பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலவும் பால் தட்டுப்பாடு குறித்து தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, தேவையான அளவு ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை தடையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவின் முகவர்கள் நலச்சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam