நைனாமலை பெருமாள் கோயிலுக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை தொடக்கம்
நாமக்கல், 19 செப்டம்பர் (ஹி.ச.) நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையை தமிழக ப
பேருந்து


நாமக்கல், 19 செப்டம்பர் (ஹி.ச.)

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இன்று முதல் அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கையைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.

மின்னாம்பள்ளி பகுதியில் அமைந்துள்ள நைனாமலை வரதராஜ பெருமாள் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து சுமார் 2,700 படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் மலைக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

இதனால் வயதானவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.30 கோடி மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. சாலை அமைக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

புரட்டாசி உற்சவம் இன்று தொடங்கியுள்ள நிலையில், கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், புதிய சாலை வழியாக பேருந்துகளை இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து பேருந்து இயக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நாமக்கல் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சோதனை ஓட்டமும் நடைபெற்றது.

இதையடுத்து, நைனாமலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் சாலை முடியும் பகுதி வரை 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தினமும் 4 முதல் 5 பேருந்துகள் வரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து சேவை தொடக்க விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேருந்தில் ஏறுவதற்காக பக்தர்கள் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நாமக்கல் டி.எஸ்.பி. ராஜேஸ்வரன், கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதில் பக்தர்கள் மீது அவர் தாக்கியதாக கூறப்படுவதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், பேருந்து அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் யாரும் வரக்கூடாது என அமைச்சர் பார்த்திபன் எச்சரித்திருந்ததாகவும், அதையும் மீறி அக்கட்சியினர் பேருந்து அருகே வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன், எம்.பி. மாதேஸ்வரன், எம்.எல்.ஏ.க்கள் திலீப், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam