பெருங்களத்தூரில் நீடிக்கும் மின்தடை - மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கிய தாம்பரம் மகளிர் காவல் நிலையம்
செங்கல்பட்டு, 19 செப்டம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்க
பெருங்களத்தூரில் நீடிக்கும் மின்தடை - மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கிய தாம்பரம் மகளிர் காவல் நிலையம்


செங்கல்பட்டு, 19 செப்டம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே பெருங்களத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி ஏற்பட்டு வரும் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மின்விசிறி கூட இன்றி தூங்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பல வீடுகளில் குடிநீர் மோட்டார் இயக்க முடியாமல் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இந்த மின்தடையின் தாக்கம் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திலும் எதிரொலித்தது. நேற்று இரவு மின்சாரம் இல்லாததால் காவல் நிலையம் முழுவதும் இருள் சூழ்ந்தது.

ஜெனரேட்டர் வசதி கூட செயல்படாததால், காவலர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புகார்களை பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டது. புகார் அளிக்க வந்த பெண்களும் இருளில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

மின்வாரியத்திடம் புகார் அளித்தால் பராமரிப்பு பணி என்று கூறி தட்டிக்கழிப்பதாகவும், ஆனால் மணிக்கணக்கில் மின்சாரம் வருவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பெருங்களத்தூர் பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b