அரியலூர் சிறுகளத்தூரில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு - சாலையில் அரசு பேருந்தை மறித்து கிராம மக்கள் போராட்டம்
அரியலூர், 19 செப்டம்பர் (ஹி.ச.) அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பாக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிறுகளத்தூரில் இருந
அரியலூர் சிறுகளத்தூரில் மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு - சாலையில் அரசு பேருந்தை மறித்து கிராம மக்கள் போராட்டம்


அரியலூர், 19 செப்டம்பர் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பல இடங்களில் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பாக பெண்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுகளத்தூரில் இருந்து கொடுக்கூர் செல்லும் பிரதான சாலையில் மீண்டும் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் பரவியது.

இதனை அறிந்த சிறுகளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் திரண்டு அந்தப் பகுதியில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி, கோவில் மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் மதுக்கடை வந்தால் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும், சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

போராட்டத்தின் ஒரு கட்டமாக, விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை சிறுகளத்தூர் பகுதியில் பொதுமக்கள் வழிமறித்து நிறுத்தினர். பேருந்துக்கு முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை திறப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கலைந்து சென்றனர்.

Hindusthan Samachar / vidya.b