Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
வடபுதுப்பட்டு பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தின் மீது பின்னால் வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றுவதற்காக வந்திருந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், வடபுதுப்பட்டு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
குறிப்பாக, விபத்துகளை தடுக்கும் வகையில் அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் சென்னை–பெங்களூரு மற்றும் பெங்களூரு–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
மறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam