த.வெ.க நிர்வாகி மீது தாக்குதல்- 12பேர் மீது வழக்குப் பதிவு
திருவண்ணாமலை, 19 செப்டம்பர் (ஹி.ச.) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், கட்சியில் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு ம
வழக்குப்பதிவு


திருவண்ணாமலை, 19 செப்டம்பர் (ஹி.ச.)

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த முரளி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.

இவர், கட்சியில் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமாரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஒருவருக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது தொடர்பாக முரளி கேள்வி எழுப்பியதாக கூறப்படும் நிலையில், இதனால் அவருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழக வெற்றி கழக மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மணிகண்டன், தெள்ளார் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட 12 பேர் நள்ளிரவில் முரளியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு முரளியிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அவரை சரமாரியாக தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முரளியின் பல் உடைந்து காயம் ஏற்பட்டதாகவும், அவர் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக முரளி அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னூர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாக்குதல் சம்பவத்திற்கான காரணம், சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சம்பவம் தொடர்பாக முரளி மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். கட்சி நிர்வாகிகளுக்கு இடையேயான பிரச்சினையில் நிர்வாகி ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் வந்தவாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam