தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணைகளை திரும்பப் பெறுக- சிபிஐ(எம்) வலியுறுத்தல்
தமிழ்நாடு, 19 செப்டம்பர் (ஹி.ச.) தமிழ்நாட்டில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் ஆசிரியர்களை தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் க
பெ.சண்முகம்


தமிழ்நாடு, 19 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் செவிலியர்கள் மற்றும் செவிலியர் ஆசிரியர்களை தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் B.Sc. செவிலியர் படிப்புக்காக 7 புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மையங்களில் செவிலியர் கல்லூரிகளை தொடங்குவதற்கான வழிகாட்டுதல்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வழிகாட்டுதல்களில், செவிலியர் கல்லூரிகளில் உருவாக்கப்படும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து பணியிடங்களும் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்படக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் அரசுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட எந்தவித தொடர் நிதிப் பொறுப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்த பின்னரே கல்லூரிகளை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது அரசு பணியில் தற்காலிகமாக பணியாற்றுபவர்களை 5 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர் நிரந்தரமாக்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு முரணானது என சிபிஐ(எம்) குற்றம்சாட்டியுள்ளது. மேலும், படிப்பை முடித்து வேலைக்காக காத்திருக்கும் செவிலியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே பணியமர்த்தும் வகையில் கடந்த 11-ம் தேதி மற்றொரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களையும், குறிப்பாக பெண்களையும் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு வழிவகுக்கும் என சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பையும், ஏழை மற்றும் எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை நம்பி பெறும் மருத்துவ சேவையையும் பாதிக்கும் என்றும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

எனவே, செவிலியர்கள் மற்றும் செவிலியர் ஆசிரியர்களை நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மேற்கண்ட இரண்டு அரசாணைகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P