Enter your Email Address to subscribe to our newsletters

குளித்தலை, 19 செப்டம்பர் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவுக்கு உட்பட்ட தேவர்மலை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக்.
இவரது அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த விவசாயி தேவராஜ், வங்கியில் விவசாயக் கடன் பெறுவதற்காக தனது நிலத்திற்கான சிட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில் விவசாயி தேவராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், அழைப்பை எடுத்தது விவசாயியின் மகன் என்பதை அறியாமல், விவசாயியிடம் பேசுவதாக நினைத்து பேசியுள்ளார். அப்போது நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பாளையத்தில் இருப்பதாக பதில் அளித்துள்ளார்.
உடனே வி.ஏ.ஓ. கார்த்திக், பஸ் ஸ்டாண்டில் உள்ள பிரண்ட்ஸ் ஹோட்டலில் இரண்டு மீன் வறுவல், தனியாக குழம்பு, தனியாக ஈர வெங்காயம் பார்சல் செய்து வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
அப்போது எதிர்முனையில் பேசியவர், தான் விவசாயியின் மகன் தான் பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு வந்து வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த விவசாயியின் மகன், அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தரவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த வி.ஏ.ஓ., உங்கள் அப்பாவை அலுவலகத்திற்கு வரச்சொல்லி சிட்டாவை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கடவூர் தாசில்தார் பானுமதி கூறுகையில், இந்த புகார் குறித்து தனக்கு நான்கு நாட்களுக்கு முன்பே தகவல் கிடைத்ததாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், இதன் மீது குளித்தலை சப்-கலெக்டர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிட்டா வழங்குவதற்கு மீன் குழம்பு பார்சலை லஞ்சமாக கேட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தேவர்மலை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து குளித்தலை சப்-கலெக்டர் சேஷாத்ரி மயும் தீபி சானு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b