Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 19 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி செயலராக ராஜேந்திரன் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்று அவர் மது போதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு சிறை பிடித்தனர்.
ஊராட்சி செயலர் அலுவலகத்திற்கு பலமுறை போதையில் வந்து பணியாற்றியதாகவும், இதுகுறித்து ஏற்கனவே அவரை எச்சரித்தும் மீண்டும் அதே நிலையில் பணிக்கு வந்ததாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், அவரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, இன்று விடுமுறை என்பதால் மது அருந்திவிட்டு வந்ததாக அவர் தெரிவித்ததாகவும், இதற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, தன்னை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சாதகமாக பணிகளை செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கமின்றி இருப்பதாகவும் ராஜேந்திரன் பேசியதாக கூறப்படும் காணொலி வெளியாகியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஊராட்சி செயலர் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam