Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
திருமணமான உடனே தம்பதிகளிடம் குழந்தை குறித்து கேள்வி எழுப்பும் சமூகப் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றும், ஒரு தம்பதி எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கருத்தரிப்பு சிகிச்சையை மேலும் எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றும் நோக்கில், பிரசாந்த் பெர்டிலிட்டி சார்பில் புதிய முன்னெடுப்பு இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குஷ்பு சுந்தர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், திருமணமான முதல் மாதத்திலேயே ஒரு தம்பதியிடம் “எப்போது குழந்தை?” என்று கேட்கும் பழக்கம் இன்றும் சமூகத்தில் தொடர்வதாக குறிப்பிட்டார்.
ஒரு தம்பதி எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவை உறவினர்களோ அல்லது சமூகமோ தீர்மானிக்க முடியாது.
திருமணமான உடனே குழந்தை குறித்து கேள்வி எழுப்பும் பழக்கத்தை சமூகம் நிறுத்த வேண்டும்” என்றார்.
மேலும், தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக கர்ப்பம் தரிப்பது பல பெண்களுக்கு சவாலாக மாறி வருவதாக அவர் தெரிவித்தார்.
உணவுப் பழக்கம், தூக்க நேரம், பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கர்ப்பம் தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.
ஒரு பெண்ணால் உடனடியாக தாயாக முடியாத சூழல் ஏற்பட்டால், அதற்கான குற்றச்சாட்டை பெரும்பாலும் பெண்ணின் மீதே சுமத்தும் மனநிலை சமூகத்தில் இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். இதுபோன்ற சமூக அழுத்தங்களைத் தாண்டி தாய்மையை அடைவது பல பெண்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக இருப்பதாகவும் கூறினார்.
ஒரு காலத்தில் ஐ.வி.எப். சிகிச்சை சமூகத்தில் தவறான பார்வையுடன் அணுகப்பட்டதாக குறிப்பிட்ட குஷ்பு, தற்போது குழந்தை பெறுவதில் சிரமம் எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கியமான மருத்துவ உதவியாக ஐ.வி.எப். தொழில்நுட்பம் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
குழந்தை பெற விரும்பும் தம்பதிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மருத்துவ அறிவியல் பல்வேறு வழிகளை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து தனது கர்ப்ப கால அனுபவங்களை பகிர்ந்து கொண்ட குஷ்பு, ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் என தெரிவித்தார். கருவில் குழந்தை அசைவதை முதன்முறையாக உணர்வது, முதல் ஸ்கேனில் குழந்தையின் சிறிய விரல்கள், கால்கள் மற்றும் முகத்தை பார்ப்பது உள்ளிட்ட ஒவ்வொரு தருணமும் மறக்க முடியாத அனுபவம் என்றும் அவர் கூறினார்.
தனது இரண்டு கர்ப்ப காலங்களையும் மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்ததாக தெரிவித்த அவர், சமீபத்தில் தனது மூத்த மகளின் திருமண நிகழ்வில், மகள் மணப்பெண்ணாக மண்டபத்திற்கு வந்த தருணத்தில் அவரது பிறப்பு மற்றும் கர்ப்ப கால நினைவுகள் அனைத்தும் மனதில் வந்து சென்றதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முதன்முறையாக குழந்தையின் அசைவை உணர்ந்த தருணத்தை இன்னும் மறக்க முடியவில்லை என்றும் குஷ்பு தெரிவித்தார். அப்போது படப்பிடிப்பில் இருந்த நிலையில் குழந்தை அசைந்ததை உணர்ந்ததும், தனது கணவருக்கு தொலைபேசியில் அழைத்து, “குழந்தை அசைந்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
சில நேரங்களில் குழந்தையின் அசைவு தெரியாதபோது மருத்துவரை அணுகியதாகவும், பின்னர் குழந்தை நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பது தெரிய வந்ததாகவும் அவர் கூறினார். இதுபோன்ற ஒவ்வொரு சிறிய தருணங்களும் தாய்மையின் அழகையும் மகிழ்ச்சியையும் உணர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தை பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு ஐ.வி.எப். உள்ளிட்ட நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் பெரும் உதவியாக இருப்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் குஷ்பு சுந்தர் வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / P YUVARAJ