Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை அம்பத்தூர் பகுதியில் பட்டப்பகலில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு, வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூரைச் சேர்ந்த கோகிலா (36) என்பவர், மருத்துவ முகாம் நடத்துவதாகக் கூறி அம்பத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று நோட்டமிட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறையில் எந்தெந்த வீடுகளில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொண்ட பின்னர், அந்த வீடுகளை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அம்பத்தூர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்காக அப்பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
நீண்ட நேர சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குப் பிறகு, கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய பெண்ணை போலீசார் அடையாளம் கண்டனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கோகிலாவை தேடும் பணியில் அம்பத்தூர் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கோவையில் பதுங்கியிருந்த கோகிலாவை அம்பத்தூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சென்னை அழைத்து வந்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின்போது, கொள்ளையடித்த பணத்தில் இருந்து திருத்தணி பகுதியில் உள்ள கோவில்களின் உண்டியலில் தலா ரூ.20 ஆயிரம் காணிக்கையாக செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோகிலா வேறு பகுதிகளிலும் இதேபோன்று ஆளில்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் அம்பத்தூர் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam