Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 02 செப்டம்பர் (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட
அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதாக கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் திரண்டபோது, அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் திடீரென திருப்பூர்–கோவை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.
முன்னதாக, இரண்டு தினங்களுக்கு முன்பு அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது, அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த அறிவுறுத்தலுக்குப் பிறகும் பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை திருமுருகன்பூண்டி மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குப்பை கொட்டும் விவகாரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாபாளையம் பகுதியில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam