திருப்பதி கோவிலில் ஆகஸ்டு மாதம் ரூ.137.44 கோடி உண்டியல் காணிக்கை
திருமலை , 02 செப்டம்பர் (ஹி.ச.) திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த மாதத்தில் 24 லட்சத்து 56 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.137 கோடிய
A


திருமலை , 02 செப்டம்பர் (ஹி.ச.)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த மாதத்தில் 24 லட்சத்து 56 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரூ.137 கோடியே 44 லட்சம் வசூலானது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், கடந்த மாதம் 10 நாட்கள் இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. இதனால் தொலைதூரங்களில் இருந்து திருப்பதிக்கு வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த நிலையில், திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் ஸ்ரீனிவாசம், ஸ்ரீதேவி-பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட 3 இடங்களில் இன்று இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டது. தரிசன டிக்கெட் பெறுவதற்காக காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திருப்பதி மலைக்கு சென்றனர்.

நாளை மறுநாள் தரிசனம் செய்வதற்கான நேர ஒதுக்கீட்டு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் வழக்கம்போல் வழங்கப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

12 மணி நேரம் காத்திருப்பு

நேற்று 78 ஆயிரத்து 310 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 573 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 38 லட்சம் வசூலானது. மேலும், 4 லட்சத்து 14 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தால் கூட்டம் அதிகரிக்கும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.

இதனால் வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் சார்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA