Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 02 செப்டம்பர் (ஹி.ச.)
வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகளை வளர்ப்பவர்கள், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்.
விதிகளை மீறினால் விலங்குகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
சமீபத்தில் நடிகர் விக்ரம், ‘லார் கிப்பன்’ (Lar gibbon) வகை குரங்குடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு விலங்குகளை வளர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மெக்காவ், பஞ்சவர்ணக் கிளிகள், லீமர்கள் மற்றும் சில வகை மனிதக் குரங்கு குடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டு விலங்குகளை வைத்திருப்பவர்கள் மத்திய அரசின் ‘பரிவேஷ் 2.0’ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வளர்த்து வருபவர்கள் 6 மாதங்களுக்குள்ளும், புதிதாக வாங்குபவர்கள் ஒரு மாதத்திற்குள்ளும் பதிவு செய்ய வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து விலங்குகளை இறக்குமதி செய்ய, முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் (Chief Wildlife Warden) தடையில்லா சான்றிதழ் (NOC) பெற வேண்டும். மேலும், 6 மாதங்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
வெளிநாட்டு விலங்குகள் உள்ளூர் வனவிலங்குகளுடன் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க வேண்டும். விலங்கு தப்பிச் சென்றாலோ அல்லது இறந்தாலோ உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலங்குகளை விற்பனை செய்யும்போதோ அல்லது வேறு நபருக்கு மாற்றும்போதோ அதற்கான விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P