சென்னை அம்பத்தூரில் பி.ஐ.எஸ் அதிகாரிகள் அதிரடி சோதனை - ஹால்மார்க் இல்லாத ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை அம்பத்தூர் பகுதியில் இயங்கி வரும் தங்க நகைக் கடைகளில் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ் .(Bureau of Indian Standards) அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, தர நிர்ணய விதிகளை மீறி
BIS officials conduct surprise raid in Ambattur


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை அம்பத்தூர் பகுதியில் இயங்கி வரும் தங்க நகைக் கடைகளில் இந்திய தர நிர்ணய அமைவனமான பிஐஎஸ்

.(Bureau of Indian Standards) அதிகாரிகள் திடீர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, தர நிர்ணய விதிகளை மீறி ஹால்மார்க் முத்திரை இல்லாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 803.99 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுப்படி, தங்க நகைகளை விற்பனை செய்வதற்கு முன்பு கட்டாயமாக ஹால்மார்க் முத்திரை பெற்றிருக்க வேண்டும் என்பது விதி. நுகர்வோருக்கு தூய்மையான தங்கம் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சில நகைக் கடைகள் இந்த விதிமுறையை பின்பற்றாமல், முத்திரை இல்லாத நகைகளை விற்பனை செய்து வருவதாக பிஐஎஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நகைக் கடை உரிமையாளர்கள் மீது இந்திய தர நிர்ணய அமைவனச் சட்டம் 2016-ன் கீழ் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடைகள் மீது கடும் அபராதம் மற்றும் உரிமம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொதுமக்கள் தங்க நகைகள் வாங்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிஐஎஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நகை வாங்கும் போது அதில் பிஐஎஸ் முத்திரை, தங்கத்தின் தூய்மை அளவு மற்றும் 6 இலக்க HUID எனப்படும் தனித்துவ அடையாளக் குறியீடு ஆகியவை உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நகைகளின் நம்பகத்தன்மையை பிஐஎஸ் கேர் (BIS CARE) என்ற செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் HUID எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும், ஹால்மார்க் இல்லாமல் நகை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் அதுகுறித்து செயலி மூலமாகவே புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b