Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளையில் கயல்விழிக்கும், வங்கி மேலாளருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், வங்கி மேலாளரின் கன்னத்தில் கயல்விழி அறைந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கயல்விழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், வங்கி மேலாளர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், அந்த விவரத்தை மறைத்துவிட்டு தனக்கு எதிராக மட்டும் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், எனவே தமக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கயல்விழி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P