Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் தொடங்கப்பட்ட மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து உயர்மட்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருவதால், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அடுத்த கானத்தூர் முதல் கொக்கிலமேடு வரை சுமார் 5,161 ஏக்கர் பரப்பளவில், 1.65 டி.எம்.சி. கொள்ளளவில் மாமல்லன் நீர்த்தேக்கத்தை அமைக்கும் திட்டம் நீர்வளத்துறை சார்பில் தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு சுமார் 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் ரூ.342 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
திட்டத்தின் முதற்கட்டமாக நீர்த்தேக்கத்திற்கான கரைகளை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் இதுவரை சுமார் 15 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரை அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வாரமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திட்டத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்வதற்காக உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த உயர்மட்ட குழுவின் ஆய்வறிக்கை கிடைத்த பின்னர், அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் ஆனந்த், மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை புறநகர் பகுதிகளின் எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்தத் திட்டத்தின் பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உயர்மட்ட குழுவின் அறிக்கை மற்றும் அதன் அடிப்படையில் எடுக்கப்படும் அடுத்தகட்ட முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam