Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் ரங்கம்மாள் சத்திரம் பகுதியில் உள்ள பழங்குடியினர் விடுதியில் தங்கி படித்து வரும் பள்ளி மாணவிகள் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக நகரப் பேருந்தில் ஏற முயன்றுள்ளனர். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசல் இருப்பதாகக் கூறி மாணவிகளை ஏற விடாமல் நடத்துனர் தடுத்ததாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓடும் பேருந்தில் இருந்து மாணவிகளை ஆத்திரத்தில் தள்ளிவிட்டதாகவும் மாணவிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த எட்டு மாணவிகளுக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த காயங்களுடன் அலறிய மாணவிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பழங்குடியின மாணவிகள் மீது நடத்துனர் காட்டிய இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பேருந்தை சிறைபிடித்து இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காயமடைந்த மாணவிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b