Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் விஜய் போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘Deep Fake’ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சிபிசிஐடி சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் முதலமைச்சர் விஜயை போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பரவி வருவது குறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் போலியான தகவல்களுடன் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
இதுதொடர்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
போலியாக உருவாக்கப்பட்ட வீடியோக்கள் தொடர்பான பதிவுகள் மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்த கணக்குகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களிடம் இருந்து வீடியோக்களின் பதிவுகள், பயனர் விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப தகவல்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் விஜய் தொடர்பான பல்வேறு AI மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வரும் சிபிசிஐடி போலீசார், அவற்றின் உண்மையான உருவாக்குநர்கள் மற்றும் பகிர்ந்த நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வீடியோக்கள் பாகிஸ்தானில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலி வீடியோக்களைப் பார்த்து பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய பதிவுகளை பகிராமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN