Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
திமுக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கட்சியின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 110 கழக மாவட்டங்களை அறிவித்துள்ளார்.
திமுக சீரமைப்புக் குழு வழங்கிய வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளின்படி, பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் மற்றும் கிளைக் கழக அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு, மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இருவர் வீதம் 76 தலைமைக் கழக பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நடைபெறும் அனைத்து மாவட்டச் செயற்குழுக் கூட்டங்களும், இந்த தலைமைக் கழக பிரதிநிதிகளின் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பகுதி, நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம் மற்றும் கிளைக் கழக அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் அல்லது மாறுபட்ட கருத்துகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தலைமைக் கழக பிரதிநிதிகளிடம் தெரிவிக்கலாம் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திமுக அமைப்பு மறுசீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் மறுசீரமைப்பு பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam