ஈரோட்டில் துப்புரவு மேற்பார்வையாளர் தாக்கப்பட்ட விவகாரம் – பணிப் பாதுகாப்பு கோரி தூய்மைப் பணியாளர்கள் திடீர்  வேலைநிறுத்தம்
ஈரோடு, 02 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் நேற்று சூலை பகுதியில் பணியில் இருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூ
போராட்டம்


ஈரோடு, 02 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலத்திற்கு உட்பட்ட 8-வது வார்டில் துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவர் நேற்று சூலை பகுதியில் பணியில் இருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ராஜேஷை அந்த நபர் தனது வீட்டிற்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. ராஜேஷின் சத்தம் கேட்டு அங்கு வந்த பெண் தூய்மைப் பணியாளர்களையும் அந்த நபர் ஆபாசமாக பேசி தாக்க முயன்றதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தாக்குதலுக்குள்ளான ராஜேஷுக்கு ஆதரவாக தூய்மைப் பணியாளர்கள் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்வதாக காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் எவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லை என தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களுக்கான சட்டப்பூர்வ மற்றும் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அதிகாரிகள் நள்ளிரவு வரை நேரில் வராமல் அலட்சியம் காட்டியதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த தூய்மைப் பணியாளர்கள், இன்று காலை முதல் பணிகளை புறக்கணித்து திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தாமதமின்றி கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், களத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் முழுமையான பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊழியர்கள் தாக்கப்படும் இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் பணிப் பாதுகாப்பு குறித்து முறையான உறுதி அளிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஈரோடு மாநகராட்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam