எனக்கு அவசரம் இல்லை, என் மக்களின் அன்றாட பிரச்சனைகள்தான் அவசரம் – இசக்கி சுப்பையா பேட்டி
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) அம்பாசமுத்திரம் தொகுதியில் தனது ராஜினாமா தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும், ராஜினாமா ஏற்கப்பட்டிருந்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்,இல்லையெனில் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற தன்னை அனுமதிக்க வேண
Esakki


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

அம்பாசமுத்திரம் தொகுதியில் தனது ராஜினாமா தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்றும், ராஜினாமா ஏற்கப்பட்டிருந்தால் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்,இல்லையெனில் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து பணியாற்ற தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் செய்தியாளர்களை சந்தித்த இசக்கி சுப்பையா, தனது ராஜினாமா தொடர்பான வழக்கு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தனது ராஜினாமா ஏற்கப்பட்ட விவகாரம் முடிந்துபோன ஒன்று என்றும், இதுகுறித்து சட்டமன்ற பேரவைத் தலைவர் அல்லது சட்டமன்ற செயலாளரிடமிருந்து தனக்கு எந்தக் கடிதமும் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

ராஜினாமா ஏற்கப்பட்டிருந்தால் காலதாமதமின்றி இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும், ராஜினாமா ஏற்கப்படவில்லை என்றால் தொகுதி மக்களுக்காக மீண்டும் பணியாற்ற தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தான் எந்தவித அவசரத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தனது தார்மீக உரிமையைத்தான் கேட்டு வருவதாகவும் இசக்கி சுப்பையா கூறினார்.

“எனக்கு அவசரம் இல்லை; என் மக்களின் அன்றாட பிரச்சனைகள்தான் அவசரம்” என அவர் குறிப்பிட்டார்.

அம்பாசமுத்திரம் தொகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகள் சட்டமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ராஜினாமா செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், காலதாமதமின்றி இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

தனது ராஜினாமா தொடர்பான வழக்கில் நீதிமன்றம் விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளதாகவும் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “தேர்தலை நடத்துங்கள். ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டுமல்லவா? நாங்கள் மே மாதம் ராஜினாமா செய்துவிட்டோம்.

அதன்படி காலம் தொடர்ந்து செல்கிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலை நடத்திவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

காலம் கடந்து செல்கிறது. இதற்கு ஒரு முடிவு வர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன் என்றார்.

Hindusthan Samachar / P YUVARAJ