Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 02 செப்டம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ‘FQL Investment Trading’, ‘FQL Exchange App’, ‘VJI Investment Group Syndicate’ உள்ளிட்ட பெயர்களில் ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் நத்தம் இரா. விஸ்வநாதன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு கடிதம் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை குறிவைத்து, ஆன்லைன் செயலி வாயிலாக பணம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நாட்களில் பணம் இரட்டிப்பாக திரும்பக் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறி மோசடி நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் தங்களது பணத்தை இழந்து வருவதாகவும், கிராமப்புற ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மோசடி திட்டத்தில் சிக்கியுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமப்புற ஏழை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை குறிவைத்து மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த மோசடியில் பணத்தை இழந்ததாக கூறப்படும் நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ராஜா என்பவர் உயிரிழந்த சம்பவத்தையும் அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அமைச்சர், உயிரிழந்த நபரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மோசடியில் பணத்தை இழந்த பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மோசடி தொடர்பாக காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN