Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன்நாத் மிஸ்ரா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தற்போது 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகக் கூறினார்.
கம்பம் பகுதி விவசாயிகளின் நலன் கருதி இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையில் விற்பனை செய்ய ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
மேலும், அறுவடை காலத்தில் நெல் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க, தேவைக்கேற்ப உரிய நேரத்தில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு தயாராக உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இதேபோல் தேனி மாவட்டத்தில் தற்போது 11 நெல் சேமிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்படும் நெல் முறையாக பாதுகாக்கப்பட்டு சேமிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் சேமிப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b