Enter your Email Address to subscribe to our newsletters

பனாஜி , 02 செப்டம்பர் (ஹி.ச.)
வக்கீல்கள் தங்களது தொழில்முறை கடமைகளை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல், மிரட்டல் மற்றும் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்கும் வகையில், ‘கோவா வக்கீல்கள் பாதுகாப்பு மசோதா-2026’ கோவா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, பணியில் இருக்கும் வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்க முடியும். மேலும், வக்கீல்களை மிரட்டுதல், துன்புறுத்துதல், அவர்களை பொய்யான வழக்குகளில் சிக்க வைப்பது மற்றும் அவர்களது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது போன்ற செயல்களுக்கும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ஓராண்டு வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வக்கீல்கள் தங்களது தொழில்முறை கடமைகளை ஆற்றும்போது வன்முறை, மிரட்டல், துன்புறுத்தல், பொய்யான வழக்குகளில் சிக்க வைக்கப்படுதல் மற்றும் சொத்து சேதம் போன்ற சம்பவங்களை எதிர்கொள்வதாகவும், இதுபோன்ற செயல்கள் சட்டத் தொழிலின் சுதந்திரமான செயல்பாட்டை பாதிப்பதுடன், பொதுமக்களின் சட்டப் பிரதிநிதித்துவம் மற்றும் நீதியை பெறும் உரிமையையும் பாதிக்கக்கூடும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்கீல்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவர்களது சொத்துகளுக்கு ஏற்படும் சேதம் அல்லது இழப்பை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த மசோதாவை, சட்டம் மற்றும் நீதித்துறையை கவனித்து வரும் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தாக்கல் செய்தார். மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்கள் அனைத்தும் ‘காக்னிசபிள்’ குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீதிமன்றங்களால் வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட வக்கீல்களுக்கு இழப்பீடு வழங்கவும் மசோதாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா அரசிதழில் வெளியிடப்படும் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA