சென்னை மற்றும் மதுரையில் உள்ள பிரபல கருத்தரித்தல் மையங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் பிரபல தனியார் கருத்தரித்தல் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப
Income Tax Department conducts surprise raids


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் பிரபல தனியார் கருத்தரித்தல் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடையாறு, பெரம்பூர், தரமணி, மதுரவாயல் மற்றும் வேளச்சேரி ஆகிய ஐந்து முக்கிய பகுதிகளில் இயங்கும் கருத்தரித்தல் மையங்கள் மற்றும் அதன் தலைமை அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

இதேபோல் மதுரை மாநகரில் உள்ள அந்த நிறுவனத்தின் கிளைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்தரித்தல் மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள், மருத்துவ சேவைக்கான பில்கள் மற்றும் வருமான கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாமல் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சோதனையின் போது முக்கிய கணக்கு ஆவணங்கள், பண பரிவர்த்தனை பதிவேடுகள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த திடீர் சோதனையால் அப்பகுதிகளில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சோதனை முடிவில் வரி ஏய்ப்பின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b