Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்தியுள்ள ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீது சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் நெறிமுறைகளுக்கும் எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதன் காரணமாக ஹார்முஸ் நீரிணை பகுதியில் பதற்றமான சூழல் நீடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சூழ்நிலையை காரணமாக பயன்படுத்திக்கொண்டு இந்தியாவில் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டதாகவும், ரூ.1,768.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டரின் விலை ரூ.2,246.50 ஆக உயர்த்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் காரணமாக பல உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், சில நிறுவனங்கள் மூடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், தேநீர், காபி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதாகவும், அதன் எதிரொலியாக கடந்த மாதம் ஒரு சிலிண்டருக்கு ரூ.192 விலை குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ரூ.153 குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிலிண்டருக்கு ரூ.9.50 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் சிறு, குறு வணிக நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரானது என்றும், இது கடும் கண்டனத்திற்குரியது என்றும் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
எனவே, வணிக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும், வணிக சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ