Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி ஊழல் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
4 வாரங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும், சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு சம்பளம் வழங்கியதாக போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு, சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறைவாசி ஒருவரின் மனைவியான கோகிலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கின் விசாரணையின்போது, சிறைவாசிகளுக்கு சம்பளம் வழங்கியதாக போலியான கணக்குகள் உருவாக்கப்பட்டு பெரும் தொகை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி வாதிட்டார்.
இதையடுத்து, ஊழல் புகார் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி, 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்cய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ