Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்திற்கு யாத்திரை சென்ற சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களின் நிலை குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடக் கோரி திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழகத்தில் இருந்து கைலாசத்துக்கு யாத்திரை சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசு செலவில் காத்மண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காணாமல் போனவர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P