10 ஆண்டுகளில் புதிய உச்சம்- UPI பரிவர்த்தனையில் பிரம்மாண்ட சாதனை!
புதுடெல்லி , 02 செப்டம்பர் (ஹி.ச.) இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள UPI சேவை, அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாத
A


புதுடெல்லி , 02 செப்டம்பர் (ஹி.ச.)

இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள UPI சேவை, அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் UPI மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் கோடியை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 25-ந்தேதி ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) ஆகியவற்றின் முன்னெடுப்பில் UPI சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

எளிதான மற்றும் விரைவான பணப்பரிவர்த்தனை வசதியை வழங்கியதால், குறுகிய காலத்திலேயே பொதுமக்களிடையே UPI பயன்பாடு பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது சிறிய டீக்கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் UPI மூலம் பணம் செலுத்துவது அன்றாட நடைமுறையாக மாறியுள்ளது. சாமானிய மக்கள் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பினரும் UPI சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் UPI சேவையின் பயன்பாடு விரிவடைந்து வருகிறது. பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் UPI அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை வசதிகள் செயல்பாட்டில் உள்ளன.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் UPI மூலம் 2,451 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையிலும், மொத்த பண மதிப்பிலும் புதிய சாதனை பதிவாகியுள்ளது.

UPI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகித்து வருகிறது.

UPI அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நேரத்தில் பதிவாகியுள்ள இந்த புதிய சாதனை, நாட்டில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதற்கு முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA