டெல்லியில் ராஜ்நாத் சிங், ராம்மோகன் நாயுடுவுடன் முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திப்பு
ஐதராபாத் , 02 செப்டம்பர் (ஹி.ச.) தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோரை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உள
A


ஐதராபாத் , 02 செப்டம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடு ஆகியோரை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.

முதலில் ராஜ்நாத் சிங்கை சந்தித்த ரேவந்த் ரெட்டி, தெலுங்கானா அரசு சார்பில் நடத்தப்பட உள்ள ‘இன்வெஸ்ட் தெலுங்கானா குளோபல் சம்மிட்-2026’ மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள ‘டிபென்ஸ் எக்ஸ்போ’வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மகபூப்நகர் மாவட்டம் தேவாரகத்ரா பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள டி.ஆர்.டி.எல். திட்டத்துக்கு இலவசமாக நிலம் ஒதுக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங்கிடம் ரேவந்த் ரெட்டி கோரிக்கை விடுத்தார். இதேபோல், ஆதிலாபாத் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இந்த திட்டத்துக்காக ஏற்கனவே 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் மேலும் 750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த மாநில அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அப்போது தெலுங்கானாவில் உள்ள விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர். ஆதிலாபாத் மற்றும் வாரங்கல் மாமுனூர் விமான நிலையங்களின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், மாநிலத்தில் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள விமான நிலையங்களுக்கு தேவையான அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் ராம்மோகன் நாயுடுவிடம் ரேவந்த் ரெட்டி வலியுறுத்தினார்.

இந்த சந்திப்புகளின்போது அமைச்சர் கத்தம் விவேக், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மல்லு ரவி, பலராம் நாயக், அனில் குமார் யாதவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA