என்.எல்.சி.யில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் – அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு, 02 செப்டம்பர் (ஹி.ச.) நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு பணிப்ப
அன்புமணி


தமிழ்நாடு, 02 செப்டம்பர் (ஹி.ச.)

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

என்.எல்.சி.யின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 6 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 11 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் 347 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும், செப்டம்பர் 3-ஆம் தேதி மேலும் இரு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு 64 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 16-ஆம் தேதி வரை மொத்தம் 13 நிறுவனங்களின் 27 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, 1,060 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி இழக்கும் நிலை உருவாகியுள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் 37,256 ஏக்கர் நிலங்களை என்.எல்.சி.க்கு வழங்கியுள்ளதாகவும், நிலம் வழங்கிய குடும்பங்களில் 1,827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வழங்கிய மேலும் 23 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படாத நிலையில், வட இந்தியர்களுக்கு நிரந்தரப் பணிகள் வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

என்.எல்.சி.யில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவும், அங்கு பணியாற்றி வரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P