Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
சனநாயக இந்தியாவை வீழ்த்தி சர்வாதிகார இந்தியாவாக மாற்றும் மோடி என்று சமூகநீதித் துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்
தி இந்து ஆங்கில நாளிதழில் நேற்று (01.09.26) வெளியான செய்தி ஒன்று நம் அனைவருக்குமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டின் கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள 'V-Dem' ஆய்வு மையம் சார்பில் ஆண்டுதோறும் உலக நாடுகளின் அரசு, அரசமைப்பு சட்டம், நீதிமன்றம், ஊடகம் போன்ற சனநாயக கட்டமைப்புகளின் செயல்பாடு போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஆராய்ந்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான V-Dem சனநாயக தரவரிசை பட்டியலில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் நிலை சரிந்துள்ளது. தேர்தல் சனநாயகம் நடைமுறையில் உள்ள மொத்தம் 179 நாடுகளில் 106வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு இந்தியாவில் அவசரநிலை அமலில் இருந்தபோது இருந்த அதே நிலையில் தற்போது இந்தியா உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்தும் நிறுவனத்தின் தன்னாட்சி நிலை, சுதந்திரமான தேர்தல் நடைமுறை, தேர்தல் முறைகேடுகள், நீதியை பெறுவதற்கு குடிமக்களுக்கு உள்ள நிலை, மத நம்பிக்கைகள் தொடர்பான உரிமை, நீதித்துறை சுதந்திரம், ஊடகங்கள் மீதான அடக்குமுறை, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை, கல்வி & கலாச்சார செயல்பாடுகளுக்கு உரிமை, கல்வி நிலையங்களின் சுதந்திரமான செயல்பாடு என பல்வேறு அளவுகோல்களில் இந்தியாவை மதிப்பீடு செய்துள்ளது V-Dem ஆய்வு அமைப்பு.
இந்தியாவின் சனநாயக கட்டமைப்புகள் முற்றுமுழுதாக சீரழிந்துள்ளதாக ஆய்வு சொல்கிறது. குறிப்பாக இந்த சீரழிவுக்கு, பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவை ஆளும் பன்மைத்துவத்துக்கு எதிரான 'இந்து தேசியவாத பாஜக அரசு' தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் நாடாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. மேலும் கடந்த வாரம் ஐநாவின் இனப் பாகுபாடுக்கு எதிரான குழு வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், இந்தியாவில் குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் அரச வன்முறை குறித்து தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக SIR மூலம் பெருமளவில் இஸ்லாமியர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தில் அரசியல் தலையீடுகளை தவிர்த்து, அதன் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட குழுவில், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெறுவர் என்று 2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்த தீர்ப்பை நீர்த்துபோகச் செய்யும் வகையில், 2023ஆம் ஆண்டிலேயே ஒன்றிய பாஜக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு பதிலாக பிரதமரால் நியமிக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஒருவர் குழுவில் இருப்பார் என்று மாற்றப்பட்டது. இதன் மூலம் தமக்கு வேண்டிய நபரை ஆணையராக ஒன்றிய அரசால் கொண்டு வர முடியும். அப்படி வந்தவர் தான் தற்போதைய ஆணையர் ஞானேஷ் குமார். இவர் தலைமையில் பாஜகவின் ஒரு பிரிவு போல தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை நாம் காணலாம்.
ED, CBI, NIA போன்ற இந்தியாவின் விசாரணை அமைப்புகள் 2014 பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், எதிர்க்கட்சிகளை வேட்டையாடி ஒடுக்கும் கருவியாக மாற்றியுள்ளது. இதுமட்டுமல்லாமல், UAPA, NSA போன்ற சட்டங்களை மக்களுக்காக போராடும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரை முடக்கும் ஆயுதமாக மாற்றி உள்ளதையும், அதனை கேள்வி கேட்காமல் அமைதி காக்கும் நீதிமன்றங்களையும் இப்போது பார்க்கிறோம்.
நவீன இந்தியாவுக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் அரசமைப்பு சட்டம், ஆர்.எஸ்.எஸ். - பாஜக சங்கபரிவார் கும்பலிடம் எதிர்கொண்டுள்ள ஆபத்தை தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே எச்சரித்திருந்தார். இன்று ஒவ்வொரு சனநாயக கட்டமைப்புகளும் முற்றாக முடக்கப்பட்டு, பாசிசத்தை நோக்கி விரைவாக இந்தியா சென்று கொண்டிருக்கிறது.
சர்வ அதிகாரம் படைத்தவர்கள், எங்களை எதிர்ப்பவர் யாரும் இல்லை என்று கருதும் பாசிசவாதிகளுக்கும் மக்களின் கைகளால் முடிவு உண்டு என்பதை சமீபத்திய மாணவர்-இளைஞர் போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN