Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
நெல்லை மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். பெயிண்டராக பணியாற்றி வந்த இவர், கடந்த 30-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பலால் வழிமறிக்கப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தாக்குதலில் பாஸ்கரனின் தலை துண்டிக்கப்பட்டு அருகே வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் மணிகண்டன், பொன்ராஜ் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் கோபி என்பவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பாஸ்கரனுக்கும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் இடையே ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, மின்கம்பங்களில் சாதி ரீதியிலான வர்ணம் பூசியது தொடர்பான பிரச்சனை, கபடி போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்பட்டது மற்றும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தொடர் முன்விரோதம் காரணமாகவே பாஸ்கரனை திட்டமிட்டு கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள கோபியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam