அரசு கோயிலில் லாரி தண்ணீரை வரவழைத்து வீதியிலேயே குளித்துவிட்டுச் செல்லும் அவலம்
தேனி, 02 செப்டம்பர் (ஹி.ச.) தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்பிரமணியர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில் வளாகத்தின் அருகே பாய்ந்தோடும் வரலா
Periyakulam


தேனி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்பிரமணியர் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

இக்கோயில் வளாகத்தின் அருகே பாய்ந்தோடும் வரலாற்றுச் சிறப்புமிக்க வராக நதியில், ஆண்-பெண் மருத மரங்களுக்கு இடையே நீராடுவது காசிக்கு அடுத்தபடியாகப் புண்ணியமாகக் கருதப்படுகிறது.

ஆனால், தற்போதைய அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால், இந்தப் புனித நதி கடுமையான சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது.

முன்னோர்களுக்குத் திதி கொடுக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூல் செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்ட நிலையில், தனியாரை வைத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 200 கட்டாயக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வசூலில் காட்டும் தீவிரத்தை நதியைச் சுத்தம் செய்வதில் அதிகாரிகள் காட்டவில்லை என்ற கொந்தளிப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திதி கொடுத்த பின் எறியப்படும் பிண்டங்களும் கழிவுகளும் அகற்றப்படாமல், ஆற்று நீர் துர்நாற்றத்துடன் சாக்கடையாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று சில்வார்பட்டியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திதி கொடுத்துவிட்டு, நதியில் குளிக்கக்கூட முடியாத நிலை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வேறு வழியின்றி, நகராட்சிக்குத் தனியாகப் பணம் செலுத்தி, லாரி தண்ணீரை வரவழைத்து வீதியிலேயே குளித்துவிட்டுச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN