Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 02 செப்டம்பர் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட 9 மாத வயதுடைய பிட் புல் நாய் திடீரென தாக்கியதில், அதன் உரிமையாளரின் தாய் முகம், தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படுகாயமடைந்தார்.
ராசிபுரம்–புதுப்பாளையம் சாலையில் உள்ள சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கணேசனின் மனைவி கவிதா (44), வீட்டிலேயே கார்மெண்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர்களது மகன் அறிவழகன் (37), நண்பரிடம் இருந்து சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு 9 மாத வயதுடைய பிட் புல் நாயை வாங்கி வந்து வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.
நாய் ஆபத்தானது என அக்கம் பக்கத்தினர் எச்சரித்த நிலையில், அதை மீண்டும் வாங்கிய இடத்திலேயே விட்டுவிடலாம் என அறிவழகன் கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வீட்டில் இருந்த கவிதாவை நாய் திடீரென சரமாரியாக கடித்துக் குதறியது. நாயை அக்கம் பக்கத்தினர் தடியால் அடித்து விரட்ட முயன்றும், அது தொடர்ந்து கவிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த கவிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள், நோய் தொற்று ஏற்படாத வகையில் வீட்டில் மருந்து தெளித்தனர். சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P