Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
சட்டப்பேரவையில் இன்று மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என்று குறிப்பிட்டார்.
இதற்காக, மின் விநியோகக் கட்டமைப்பை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புகார் பெறப்பட்ட 15 நிமிடங்களில் களத்திற்கு சென்று பழுதை சரிசெய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, ஆறு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த புதிய துணை மின் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்த பிறகு, மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேபோல், சென்னையில் மழைக்காலங்களில் பாதுகாப்பு கருதி, தாழ்வாக உள்ள மின் பெட்டிகள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகளை உயரமான இடங்களுக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
சாலைகளில் தண்ணீர் தேங்குவதால் ஏற்படும் மின் விபத்துகளைத் தடுக்கவும், மின் கசிவைத் தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.
Hindusthan Samachar / vidya.b