எங்கு பார்த்தாலும் அழிவும், சீர்கேடும் -பி.ஆர்.எஸ். கட்சி மூத்த தலைவர் கே.டி.ஆர். கடும் குற்றச்சாட்டு
ஐதராபாத் , 02 செப்டம்பர் (ஹி.ச.) தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, அந்த அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் ‘சார்ஜ் ஷீட்’ வெளியிடப்பட்டது. இதையொட்டி தெலங்கானா பவனில் நடைபெற்ற நி
A


ஐதராபாத் , 02 செப்டம்பர் (ஹி.ச.)

தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, அந்த அரசின் செயல்பாடுகளை விமர்சித்து பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் ‘சார்ஜ் ஷீட்’ வெளியிடப்பட்டது.

இதையொட்டி தெலங்கானா பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.ஆர்.எஸ். செயல் தலைவர் கே.டி.ஆர். கலந்து கொண்டு காங்கிரஸ் அரசின் 1,000 நாள் ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் தெலங்கானாவில் எங்கு பார்த்தாலும் அழிவும், சீர்கேடும் தான் காணப்படுகிறது. இது 1,000 நாள் ஆட்சி அல்ல; மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின் காலகட்டம். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மோசடி” என்று குற்றம்சாட்டினார்.

வளர்ச்சிப் பணிகள் பெரிய அளவில் நடைபெறாத நிலையிலும் மாநில அரசு ரூ.4.50 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளதாக அவர் கூறினார். மேலும், ஏழை மக்களின் நிலங்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்த்து முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இதில் 30 சதவீதம் வரை கமிஷன் பெறப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடன் தள்ளுபடி

விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாக கூறிய கே.டி.ஆர்., இதுவரை ரூ.20 ஆயிரம் கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விமர்சித்தார். கடன் தள்ளுபடி செய்வதாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி கடவுள்களின் பெயரில் சத்தியம் செய்திருந்ததாகவும், ஆனால் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி கே.சி.ஆர். தலைமையிலான ஆட்சியில் தெலங்கானா ‘அன்னபூர்ணா’ மாநிலமாக மாற்றப்பட்டதாகவும், தற்போதைய காங்கிரஸ் அரசு விவசாயத்துறையை சீரழித்துவிட்டதாகவும் கே.டி.ஆர். குற்றம்சாட்டினார்.

காளேஸ்வரம் விவகாரம்

காளேஸ்வரம் திட்டத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு விவசாயிகளை காங்கிரஸ் அரசு பாதித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிநீர் விவகாரங்களில் தெலங்கானாவின் நலன்களுக்கு எதிராக எந்த நடவடிக்கை எடுத்தாலும் காங்கிரஸ் அரசை பி.ஆர்.எஸ். கட்சி விட்டு வைக்காது என்றும் அவர் எச்சரித்தார்.

மிஸ் வேர்ல்டு போட்டி மற்றும் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு பெருமளவில் நிதி செலவிடும் அரசு, விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக போதிய நிதியை செலவிடுவதில்லை என்றும் கே.டி.ஆர். விமர்சித்தார்.

வேலைவாய்ப்பில் தோல்வி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுக்குள் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக கே.டி.ஆர். நினைவுபடுத்தினார்.

ஆனால், வேலைவாய்ப்பு காலண்டர் என்ற பெயரில் வேலைவாய்ப்புகள் இல்லாத ‘ஜாப்லெஸ் காலண்டர்’ வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கேலி செய்தார்.

டெல்லியில் ராகுல் காந்தியுடன் இணைந்து ஜனநாயகம் குறித்து பேசும் காங்கிரஸ் தலைவர்கள், தெலங்கானாவில் வேலைவாய்ப்பு கேட்டு போராடும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் கே.டி.ஆர். குற்றம்சாட்டினார்.

இவ்வாறு கே.டி.ஆர். பேசினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA