Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 02 செப்டம்பர் (ஹி.ச.)
தெலங்கானாவில் காங்கிரஸ் அரசு 1,000 நாட்கள் ஆட்சியை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த ஆட்சியின் செயல்பாடுகளை டிஆர்எஸ் கட்சியின் தலைவர் கவிதா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது அறிக்கையில் அவர் கூறுகையில் :
காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் கடந்தும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் விரோத கொள்கைகளுடன் அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ஹைட்ரா என்ற பெயரில் ஏழை மக்களின் வீடுகள் இடிக்கப்படுவதாகவும், நலத்திட்ட விடுதிகளில் போதிய பாதுகாப்பு இல்லாததால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கவிதா தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படாததால் வேலையில்லா இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்காததால் அவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாகவும் அவர் கூறினார். இதனுடன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையும் மோசமடைந்து, குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கவிதா விமர்சித்தார்.
“இவைதான் ரேவந்த் ரெட்டி அரசு 1,000 நாட்களில் சாதித்த உண்மையான முன்னேற்றம்” என்று அவர் கிண்டலாக குறிப்பிட்டார்.
மேலும், தெலங்கானா போராட்டத்தில் போராளிகளின் ரத்தம் சிந்திய நாளிலிருந்தே காங்கிரஸ் அரசின் வீழ்ச்சிக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டதாக கவிதா தெரிவித்தார். இந்த அரசின் காலம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறிய அவர், அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
எதிர்க்கட்சியாக மக்களின் பக்கம் நின்று, அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
வருகிற நாட்களில் தெலங்கானாவில் மீண்டும் மக்களுக்கான அரசு ஆட்சிக்கு வருவது உறுதி என்றும் கவிதா நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA