நீலகிரியில் 13-வது நாளாக தொடரும் புலி வேட்டை - ஓவேலியில் கும்கி யானைகளுடன் தேடுதல் பணியில் வனத்துறை தீவிரம்
நீலகிரி, 02 செப்டம்பர் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் கடந்த சில வாரங்களாக லாரிஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புகுந்த புலி இரண்டு பேரை தாக்கி கொன்றதை அடுத்து, அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர
நீலகிரியில்  13-வது நாளாக தொடரும் புலி வேட்டை - ஓவேலியில் கும்கி யானைகளுடன் தீட்டுதல் பணியில் வனத்துறை தீவிரம்


நீலகிரி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் கடந்த சில வாரங்களாக லாரிஸ்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் புகுந்த புலி இரண்டு பேரை தாக்கி கொன்றதை அடுத்து, அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

புலியை பிடிப்பதற்காக வனத்துறை பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதி முழுவதும் 136 தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 15 இடங்களில் நேரடி ஒளிபரப்பு வசதி கொண்ட லைவ் கேமராக்களும் அடங்கும்.

மேலும் புலியை உயிருடன் பிடிப்பதற்காக 13 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தெர்மல் ட்ரோன்கள் மூலமும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் இதுவரை புலி சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வருகிறது.

இதனையடுத்து தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்த முதுமலை புலிகள் காப்பகத்தின் தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து பயிற்சி பெற்ற கும்கி யானைகளான பொம்மன் மற்றும் உதயன் ஆகிய இரண்டு யானைகள் வரவழைக்கப்பட்டு களத்தில் இறக்கப்பட்டுள்ளன.

அடர்ந்த வனப்பகுதிக்குள் மனிதர்களால் செல்ல முடியாத இடங்களில் இந்த கும்கி யானைகள் மீது அமர்ந்தபடி வன ஊழியர்கள் புலியை இன்று 13வது நாளாக தேடி வருகின்றனர்.

இதுதவிர, வனத்துறையின் சிறப்பு அதிரடிப்படைகளான ஆல்பா மற்றும் டெல்டா படைப்பிரிவினர் உள்பட 130-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புலி நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் யாரும் தனியாக நடமாட வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறும், குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம் எனவும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அச்சம் காரணமாக பள்ளிக்கு செல்ல தயங்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்களை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வனத்துறை வாகனங்களிலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு அழைத்து வரும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புலி பிடிபடும் வரை இந்த நடவடிக்கைகள் தொடரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b