தூத்துக்குடி அருகே நகை விவகாரத்தில் பெண் வெட்டிக்கொலை – காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
தூத்துக்குடி, 02 செப்டம்பர் (ஹி.ச.) தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கும் பழக்க
கொலை


தூத்துக்குடி, 02 செப்டம்பர் (ஹி.ச.)

தூத்துக்குடி அருகேயுள்ள முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்.

இவர் தட்டார்மடம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் நெருங்கிப் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புலட்சுமிக்கு சொந்தமான தங்க நகைகளை முத்துக்குமார் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நகை விவகாரம் சுப்புலட்சுமியின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது தங்கை பிரியா, முத்துக்குமாரிடம் நகைகளை திருப்பிக் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் முத்துக்குமார் ஆத்திரமடைந்து அரிவாளால் பிரியாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயமடைந்த பிரியா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நகை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படும் காவலர் முத்துக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam