Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழகத்தின் பாரம்பரியமான நெசவுத் தொழில் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக நூல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது நெசவுத் தொழில்துறையை கடுமையாக பாதித்துள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் பாரம்பரியத் தொழில்களில் முக்கியமான ஒன்றான நெசவுத் தொழில், மூலப்பொருள் தட்டுப்பாடு, மின்கட்டண உயர்வு மற்றும் சந்தை மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்கனவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த சில மாதங்களாக நூற்பாலைகள் நூல் விலையை படிப்படியாக உயர்த்தி வந்த நிலையில், தற்போது ஒரு கிலோ நூலுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.30 முதல் ரூ.40 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடக்கத்தில் நூலின் ரகங்களுக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை உயர்த்தப்பட்டதாகவும், பின்னர் பருத்தி விலை உயர்வு மற்றும் வரத்து குறைவை காரணம் காட்டி மேலும் ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். நடப்பு மாதத்தில் மேலும் ஒரு கிலோவுக்கு ரூ.10 வரை விலை உயர்த்தப்பட்டதால், மொத்தமாக ஒரு கிலோ நூலுக்கு ரூ.40 வரை விலை உயர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த தொடர் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே பழைய விலை ஒப்பந்தங்களின் அடிப்படையில் துணி உற்பத்திக்கான ஆர்டர்களை பெற்றுள்ள நெசவு உற்பத்தியாளர்கள் கடுமையான நிதி இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தங்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சிறு மற்றும் குறு விசைத்தறி, கைத்தறி கூடங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உடனடி நடவடிக்கை தேவை
இந்த நெருக்கடியான சூழலில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு உடனடியாக இடைக்கால நிவாரண நிதியுதவி மற்றும் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசு மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பருத்தி மற்றும் நூலை முன்கூட்டியே கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்கு சந்தை விலையை விட குறைந்த விலையில் மானியத்துடன் தடையின்றி வழங்கும் வகையில் நிரந்தர கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
உற்பத்திச் செலவை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தின் உச்சவரம்பை மேலும் உயர்த்த வேண்டும் என்றும், பள்ளி சீருடைகள், பொங்கல் வேட்டி–சேலை உள்ளிட்ட தமிழக அரசின் அனைத்து துணி கொள்முதல்களிலும் உள்ளூர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நலிவடைந்த நெசவாளர் சங்கங்களுக்கு முழு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாவட்ட வாரியாக மூலதன நெருக்கடியில் சிக்கியுள்ள சிறு நெசவுக் குழுமங்களை கண்டறிந்து, அவர்களுக்காக சிறப்பு நிதி மறுசீரமைப்பு தொகுப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிலையான விலை நிர்ணயக் கொள்கை வேண்டும்
பருத்தி மற்றும் நூல் விலையில் மாதந்தோறும் ஏற்படும் கட்டுப்பாடற்ற விலை உயர்வை தடுத்து, நிலையான தேசிய விலை நிர்ணயக் கொள்கையை ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ஜவுளித் தொழிலின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்த பிறகே மூலப்பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை ஏற்படுத்தி நூல் விலையை உயர்த்தும் பருத்தி பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கமாடிட்டி சந்தை வாயிலாக நடைபெறும் ஊக வணிகத்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றிய அரசின் மூலப்பொருள் விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் மானியத்தை சிறு நெசவாளர்களுக்கு மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், சிறு மற்றும் குறு நெசவு நிறுவனங்களின் நவீனமயமாக்கல் மற்றும் நடைமுறை மூலதனத் தேவைகளுக்காக குறைந்த வட்டியில் நீண்டகால சிறப்பு கடனுதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
நெசவுத் தொழில் நலிவடைவது என்பது ஒரு தொழில்துறையின் இழப்பு மட்டுமல்ல என்றும், தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலை மட்டுமே நம்பி வாழும் ஏராளமான எளிய மக்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நெசவாளர்களின் தறி ஓசை முழுமையாக நின்றுபோகும் அவல நிலை ஏற்படுவதற்கு முன்பே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ