Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 02 செப்டம்பர் (ஹி.ச.)
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த பதினைந்து நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை அரசு தரப்பில் எந்தவித சுமூக முடிவும் எட்டப்படாத நிலையில், இந்த விவகாரம் இன்று சட்டசபையில் சூடான விவாதத்தை கிளப்பியது.
சட்டசபையில் இது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை நியாயமானது. கடந்த ஆண்டு இதே தூய்மைப் பணியாளர்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவராக இருந்தபோது விஜய் அவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இன்று அவரே முதலமைச்சராக இருக்கிறார். எனவே முதலமைச்சர் விஜய் உடனடியாக தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு மிகப் பெரிய நிதிச் சுமையில் இருக்கிறது. திமுக ஆட்சியில் கூட தூய்மைப் பணியாளர்கள் 100 முதல் 150 நாட்கள் வரை போராடியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
அமைச்சரின் இந்த பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த உதயநிதி, போராட்டக் களத்திற்கு இதுவரை அரசின் எந்த அமைச்சரும் நேரில் சென்று பணியாளர்களை சந்திக்கவில்லை. திமுக ஆட்சியில் 100 நாட்கள் போராடினார்கள் என்று சொல்கிறீர்கள். நீங்களும், அதாவது தமிழக வெற்றிக் கழக அரசும் நூறு நாட்கள் வரை காத்திருக்கப் போகிறீர்களா? இது மனிதாபிமான பிரச்சினை. உடனடி தீர்வு தேவை என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில்,
தூய்மைப் பணியாளர்கள் நமது எதிரிகள் அல்லர். அவர்களின் கடினமான பணிச் சூழலை அரசு உணர்ந்துள்ளது.ஏற்கனவே முதலமைச்சர் இரண்டு முறை தூய்மைப் பணியாளர்களைத் நேரில் அழைத்து அவர்தம் கோரிக்கைகள் குறித்துப் பேசியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீது காவல்துறை தரப்பில் முறையற்ற தள்ளுமுள்ளு சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால், அதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் எப்போதும் தொடரக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b