Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 02 செப்டம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சீரான அளவில் இருந்து வருவதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினிஃபால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் குளிப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஆற்றில் நீரின் வேகம் மற்றும் சுழற்சி அதிகமாக இருப்பதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு பரிசல் இயக்கத்திற்கான தடை இன்று 18-வது நாளாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், காவிரி கரையோரம் தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆற்றில் இறங்கவோ, தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து சீராக குறையும் பட்சத்தில் பரிசல் இயக்கத்திற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பரிசல் தடை நீடிப்பதால் பரிசல் ஓட்டிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b