பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1489 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு, 02 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநில வனப்பகுதிகள் உள்ளிட்ட பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பக
Water inflow to Bhavanisagar Dam has increased


ஈரோடு, 02 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டத்தின் ஜீவாதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநில வனப்பகுதிகள் உள்ளிட்ட பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இந்த நீர்வரத்து அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று வரை வினாடிக்கு 933 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1489 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும், இதில் தற்போது 4.5 டிஎம்சி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

அதே நேரத்தில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்காகவும் வினாடிக்கு 100 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரத்து அதிகமாகவும், வெளியேற்றம் குறைவாகவும் இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணையை நம்பி ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

குறிப்பாக கீழ் பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு இந்த நீர்வரத்து அதிகரிப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மழை தொடரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b