Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 20 செப்டம்பர் (ஹி.ச)
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் இயங்கி வரும் வெல்ல ஆலைகளில், சர்க்கரை கலந்த வெல்லம் தயாரிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்கலம், பெரிய சோழி பாளையம் பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட நாட்டு சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
இதில் நான்கு ஆலைகளில், வெல்லத்துடன் கலப்படம் செய்ய வைத்திருந்த, 6 டன் சர்க்கரை, 3 டன் கலப்பட வெல்லம், அச்சு வெல்லத்தை பறிமுதல் செய்தனர். 8 ஆலைகளில் இருந்து பரிசோதனைக்காக வெல்லம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஐந்து ஆலைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி கூறுகையில், வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளில், தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான விதிமுறை உள்ளது.
ஆனால், லாப நோக்கத்திற்காக விதிகள் மீறப்பட்டுள்ளன. வெல்லம் தயாரிப்பின் போது, வெள்ளை சர்க்கரை கலப்பது உள்ளிட்ட உணவு பாதுகாப்பு விதிமீறல் கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உட்கொள்வதால் பொதுமக்களின் உடல்நலனுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் இதுபோன்ற சோதனைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b