Enter your Email Address to subscribe to our newsletters

மங்களகிரி , 20 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட மதுபான கொள்கையில் ரூ.3,200 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிகாரி சத்யபிரசாத் அளித்த வாக்குமூலம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் பதில் அளிக்க வேண்டும் என்று வீட்டுவசதித்துறை அமைச்சர் கொலுசு பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பார்த்தசாரதி கூறியதாவது:-
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மதுபான கொள்கை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆந்திர மாநில மதுபான கழகத்தின் முன்னாள் சிறப்பு அதிகாரி சத்யபிரசாத் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தில் சுமார் ரூ.3,200 கோடி முறைகேடாக பணம் கைமாறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் முக்கிய முடிவுகள் அப்போதைய முதல்-மந்திரி ஜெகனின் தாடேபள்ளி இல்லத்தில் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மதுபான கடைகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ரத்து செய்து, ரொக்கப் பணப் பரிவர்த்தனைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்தது ஏன்? மதுபான விற்பனை மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் ரொக்கப் பணம் எங்கு சென்றது? என்பதை ஜெகன் விளக்க வேண்டும். புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தியது, ஆர்டர்களை கையால் ஒதுக்கீடு செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் முறைகேட்டுக்கு வழிவகுத்ததாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
மதுபான போக்குவரத்து ஒப்பந்தங்களையும் மாநில அளவில் ஒருங்கிணைத்து, அதிக கட்டணத்தில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதாகவும், மதுபான கடைகளில் ஊழியர்கள் நியமனம் மற்றும் அவர்களுக்கு சம்பளம் வழங்கியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியில் தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்து மக்களின் உடல்நலத்துடன் விளையாடியதாகவும் பார்த்தசாரதி குற்றம் சாட்டினார்.
2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அதற்கு மாறாக செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய கூட்டணி அரசு மதுபான விற்பனையில் தரம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
கவுடா சமூகத்தினருக்கு 10 சதவீத மதுபான கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ‘ஏ.பி. எக்சைஸ் சுரக்ஷா’ செயலி மூலம் மதுபானத்தின் தரம் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.
13 வகையான பரிசோதனைகளுக்கு பிறகே மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரூ.3,200 கோடி மதுபான ஊழல் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மவுனம் கலைத்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பார்த்தசாரதி வலியுறுத்தினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA