Enter your Email Address to subscribe to our newsletters

காக்கிநாடா , 20 செப்டம்பர் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம்
காக்கிநாடா புறநகர் திம்மாபுரத்தில் உள்ள ஆகுண்டி லட்சுமி நினைவு கோசாலை வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிரபல சொற்பொழிவாளர் சாகண்டி கோடேஸ்வரராவ் தலைமையில் ‘பாரதீயம்’ என்ற பெயரில் தேசப்பற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அமைச்சர் நாரா லோகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில்,
வகுப்பறையில் இருந்தே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனால்தான் நான் கல்வித்துறையை தேர்வு செய்தேன்.
மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவுடன் இந்திய பாரம்பரியம் மற்றும் நெறிமுறை மதிப்புகளையும் இணைத்துக் கொண்டு கல்வி கற்க வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் அவர்கள் உலக அளவில் வெற்றி பெற முடியும் என்றார்.
மேலும், தேசப்பற்று மற்றும் நெறிமுறை மதிப்புகள்தான் குடும்ப அமைப்பின் அடித்தளம் என்று குறிப்பிட்ட அவர், நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் நமக்கு வழிகாட்டிகளாக திகழ்கிறார்கள் என்றார்.
அவர்களின் பாதையில் மாணவர்கள் பயணித்து, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும், மதிப்புகளுடன் கூடிய கல்வியை கற்று பெற்றோருக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அரசின் கல்வி சீர்திருத்த முயற்சிகளுக்கு மாணவர்களின் நெறிமுறை வளர்ச்சியும் துணை சேர்ந்தால், ஆந்திரபிரதேச கல்வி அமைப்பு நாட்டிலேயே சிறந்ததாக உருவாகும் என்றும் நாரா லோகேஷ் நம்பிக்கை தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA