Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 20 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான இடத்தை மூன்று மாதங்களுக்குள் கண்டறிய வேண்டும் என்றும், இந்தி மொழியை கற்கக் கூடாது என்ற குறுகிய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியிருப்பது தமிழ்நாட்டிற்கு ஒன்றும் வியப்பளிக்கவில்லை என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
மேகதாது அணை விவகாரம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பறிபோய் வருவதாக அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜகவின் நன்மதிப்பைப் பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் உரிய ஆதாரங்களுடன் வாதிடாமல் தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பது, ஒன்றிய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை கேட்டுப் பெறாமல் மவுனம் காப்பது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது என தொடர்ந்து ஒன்றிய அரசிடம் தமிழக அரசு சரணாகதி அடைந்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்துள்ள தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கொள்கையோ, தமிழ் பற்றோ, தமிழ்நாட்டின் மீதான பற்றோ, மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோ இல்லை எனவும் அப்பாவு விமர்சித்துள்ளார்.
தங்களைச் சுற்றியுள்ள ரெட்டி கேங் துணையுடன் ஆட்சி, அதிகாரம் மற்றும் பணத்தின் மீது கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவின் உதவியுடன் ஆட்சி அமைத்து, சில கட்சிகளின் கூட்டணியுடன் ஆட்சியில் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சிலரை சில நாட்கள் ஏமாற்றலாம், பலரை பல நாட்கள் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது என்றும் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மக்கள் விரோதப் போக்கை மக்கள் அடையாளம் கண்டுவிட்டதாகவும், அரசியல் நடவடிக்கைகளுக்கு விரைவில் மக்கள் முடிவுகட்டத் தயாராகிவிட்டதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ