ஆகஸ்ட் வரை தமிழக அரசின் வருவாய் ரூ.87 ஆயிரம் கோடி - நிதிப் பற்றாக்குறை ரூ.47 ஆயிரம் கோடி
தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.) 2026–27-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாத இறுதி வரையிலான தமிழ்நாடு அரசின் வரவு–செலவு கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன. தணிக்கை செய்யப்படாத தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் வரை அரசின் வருவாய் வரவுகள் ரூ.87 ஆயிரத்து 49 க
தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு, 20 செப்டம்பர் (ஹி.ச.)

2026–27-ம் நிதியாண்டில் ஆகஸ்ட் மாத இறுதி வரையிலான தமிழ்நாடு அரசின் வரவு–செலவு கணக்குகள் வெளியிடப்பட்டுள்ளன.

தணிக்கை செய்யப்படாத தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, ஆகஸ்ட் வரை அரசின் வருவாய் வரவுகள் ரூ.87 ஆயிரத்து 49 கோடியே 65 லட்சமாக பதிவாகியுள்ளது.

2026–27 நிதியாண்டுக்கான தமிழக அரசின் மொத்த வருவாய் வரவு ரூ.3 லட்சத்து 44 ஆயிரத்து 575 கோடியே 31 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.87 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் வரை வரி வருவாய் மூலம் ரூ.75 ஆயிரத்து 366 கோடியே 83 லட்சம் கிடைத்துள்ளது.

இதில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி மூலம் ரூ.31 ஆயிரத்து 881 கோடியே 37 லட்சமும், முத்திரை மற்றும் பதிவுக் கட்டணங்கள் மூலம் ரூ.10 ஆயிரத்து 493 கோடியே 30 லட்சமும், மாநில கலால் வரி மூலம் ரூ.24 ஆயிரத்து 188 கோடியே 31 லட்சமும் கிடைத்துள்ளன.

மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்காக ரூ.17 ஆயிரத்து 28 கோடிக்கும் அதிகமாக பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மாத வாரியாக முறையே ரூ.21,551 கோடியே 29 லட்சம், ரூ.20,688 கோடியே 81 லட்சம், ரூ.22,704 கோடியே 86 லட்சம், ரூ.20,773 கோடியே 50 லட்சம் மற்றும் ரூ.32,098 கோடியே 92 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதனிடையே, ஆகஸ்ட் மாத இறுதி வரை அரசின் மொத்த செலவினம் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 839 கோடியே 35 லட்சமாக உள்ளது.

இதில் வருவாய் கணக்கிலான செலவினம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 140 கோடியே 12 லட்சமாகவும், மூலதனச் செலவினம் ரூ.9 ஆயிரத்து 699 கோடியே 23 லட்சமாகவும் உள்ளது.

வருவாய் வரவுக்கும் வருவாய் செலவினத்துக்கும் இடையே ரூ.34 ஆயிரத்து 18 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், ஆகஸ்ட் மாத இறுதி வரையிலான நிதிப் பற்றாக்குறை ரூ.47 ஆயிரத்து 113 கோடியே 5 லட்சமாக உள்ளது. முதன்மை பற்றாக்குறை ரூ.2 ஆயிரத்து 680 கோடியே 33 லட்சமாக கணக்கிடப்பட்டுள்ளது.

முதல் ஐந்து மாதங்களுக்கான இந்த தற்காலிக கணக்குகள் மூலம், 2026–27 நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் திரட்டல் மற்றும் செலவின நிலவரம் தெரிய வந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam